அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., மறுதேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சென்னை ஐகோர்டில் சூளையைச் சேர்ந்த யாமினி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயராஜ் ஆகியோர், தனித் தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். யாமினி தனது மனுவில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை, தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. கடந்த ஜூலை, 12ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதில், 6 லட்சத்து76 ஆயிரத்து 763 ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வில், 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்ததால், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் வரும் அக்டோபர் 3ம் தேதி மறுபடியும் தேர்வு எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், கடந்த ஆகஸ்ட், 26ம் தேதி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். கடந்த ஜூலை மாதத்துக்கு பின், என்னைப் போல் ஆயிரக்கணக்கானோர் புதிதாக பி.எட்., படித்து காத்திருக்கிறோம். எனவே, எங்களுக்கு இந்தத் தேர்வை எழுத தகுதி உண்டு. என்னைப் போல் புதிதாக பி.எட்., படித்தவர்களையும் தேர்வெழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுக்கள் நேற்று நீதிபதி நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த பாண்டியன் ஆஜராகி, சில வாதங்களை முன் வைத்தார்.
அவை வருமாறு: இந்த கோரிக்கை குறித்து அரசு பரிசீலனை செய்தது. ஜூலைக்குப் பின் பி.எட்.,முடித்தவர்களையும் இத்தேர்வில் அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே,இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், புதிதாக பி.எட்., படித்தவர்களும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 3ம் தேதி நடக்க இருந்த தகுதித் தேர்வை, அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றியுள்ளோம். மனுதாரர் விஜயராஜின் கோரிக்கை தொடர்பாக, அமைச்சர் தலைமையில், நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தி, பரிந்துரைகளை குழு அளிக்கும். அந்த பரிந்துரைகளை அரசு அமல்படுத்தும். இவ்வாறு அரவிந்த பாண்டியன் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு வருமாறு: இப்பிரச்னையில் அரசு நல்ல முடிவை எடுத்துள்ளது. கடந்த தேர்வில் விண்ணப்பிக்காதவர்களும் இத்தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை அளிக்க அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து, விளம்பரங்கள் செய்ய வேண்டும். ஏற்கனவே தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் தேர்வு எழுத புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் "ஹால் டிக்கெட்'டை அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தேர்வரின் கோரிக்கையை பரிசீலனை செய்து, டி.இ.டி., தேர்வுக்கு, புதிய தேர்வர்களும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதனால், அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., மறுதேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. புதிய தேர்வர்களுக்காக, 24ம் தேதி காலை, 10 மணி முதல், 28ம் தேதி மாலை, 5:30 மணி வரை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. இவர்களுக்குள்ள, தேர்வு மையத்தில், எவ்வித மாற்றமும் கிடையாது. புதியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலேயே வழங்க வேண்டும். நேரிடையாக, டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு அனுப்பக் கூடாது.
புதிதாக விண்ணப்பிப்பவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றை நகல் எடுத்து, நகலில் முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்தை,தேதியுடன் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த பின், விண்ணப்பத்தில், எவ்வித மாற்றமும் செய்ய முடியாது. ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர், மொழிப் பாடத்தை மாற்ற விரும்பினால், 28ம் தேதிக்குள், டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம். புதிய தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்' அனுப்பப்பட மாட்டாது. டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. பழைய தேர்வர்களுக்கு, ஏற்கனவே டி.ஆர்.பி., இணையதளத்தில், "ஹால் டிக்கெட்'வெளியிடப்பட்டுள்ளது. புதிய தேர்வர்களுக்கு, அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
நன்றி...http://www.teachertn.com/2012/09/tn-tet-14.html
No comments:
Post a Comment